பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் உறவினர்கள் சூழ நின்றுகொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர் மணப்பெண் ஆர்த்தியை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடியதால் திருமண மண்டபத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் வயிற்றில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்த ஆர்த்தியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தீபந்து என்பது தெரியவந்துள்ளது. காதல் விவகாரம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள தீபந்துவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

