Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

20%க்கு மேல் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படாது-இணை அமைச்சர்

சென்னை : கடந்த மூன்று எத்தனால் வழங்கல் ஆண்டுகளில் (Ethanol Supply Years), அரசுக்குச் சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) மொத்தம் 2,417.78 கோடி லிட்டர் எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1.72 லட்சம் கோடியாகும்.

இந்திய எண்ணெய் கழகம் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் எத்தனால் கொள்முதல், 2023-24 எத்தனால் வழங்கல் ஆண்டில் 679.04 கோடி லிட்டராக இருந்தது. இது 2024-25-ல் 1,033.31 கோடி லிட்டராக உயர்த்தப்பட்டது.

நடப்பு எத்தனால் வழங்கல் ஆண்டில் (2025-26) இதுவரை ஜூன் மாதம் வரை 705.43 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் 501 எத்தனால் சப்ளையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அளவை தற்போதைய 20% என்ற உச்ச வரம்பைத் தாண்டி உயர்த்துவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார். எதிர்காலத்தில் உயர் எத்தனால் கலப்பு குறித்து விரிவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளுக்குப் பின்னரே முடிவு எடுக்கப்படும் என்றார்.

இந்தியாவில் எத்தனால் கலப்புத் திட்டம் 2001-ஆம் ஆண்டிலேயே சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், 2013-14-ல் சராசரியாக 1.53% ஆக இருந்த எத்தனால் கலப்பு விகிதம், படிப்படியாக உயர்த்தப்பட்டு 2025-26 எத்தனால் வழங்கல் ஆண்டில் 20% ஆக எட்டப்பட்டுள்ளது என்றார். NITI Aayog, ARAI, SIAM, IIP மற்றும் வாகன உற்பத்தியாளர்களின் முழுமையான ஆய்வுகளுக்குப் பிறகே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

E20 எரிபொருள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது அல்ல என்றும், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக E19-E20 எரிபொருள்கள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தி வருவதாகவும், எத்தனால் கலப்பால் என்ஜின் பழுதானதாக எந்தவொரு அதிகாரப்பூர்வமான ஆதாரமும் இதுவரை பதிவாகவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.

error: Content is protected !!