Skip to content

அரசுப் பேருந்துகளில் ரேடியோ, டேப் ரிக்கார்டர் பயன்படுத்த தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தின் போது ரேடியோ மற்றும் டேப் ரிக்கார்டர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசுப் போக்குவரத்து கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநரிடமிருந்து அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கும்போது அதிக ஒலியுடன் ரேடியோக்களைப் பயன்படுத்துவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை அறிவுறுத்தியும் சில ஓட்டுநர்கள் இதை சரியாகக் கடைப்பிடிப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள போக்குவரத்து கழகம், இனி விதியை மீறி ரேடியோ அல்லது டேப் ரிக்கார்டர் பயன்படுத்தியது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் செயல்பாடுகளைக் கிளை மேலாளர்கள், பேருந்து நிலையக் கண்காணிப்பாளர்கள் மற்றும் வழித்தடப் பரிசோதகர்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!