தமிழ்நாடு முதல்-அமைச்சர் இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டினை உருவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை தொடங்கி, அந்த நிதியில் இருந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்க நிதியுதவி வழங்குவதுடன், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க ஆகின்ற விமான போக்குவரத்து மற்றும் தங்குவதற்கான செலவுகளுக்காகவும், விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மேற்கொள்ளவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ, தடகளம், நீச்சல் மற்றும் கால்பந்து போட்டிகளில் பதக்கங்கங்கள் வென்ற நரம்பியல்சார் மாற்றுத்திறனாளிகளான 29 வீரர், வீராங்கனைகளுக்கு இன்று (26.2.2026) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து மொத்தம் 24.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியைச் (Sports Hostel of Excellence) சேர்ந்த ஜூடோ வீரர்கள் அ.ஆகாஷ் ராஜ் மற்றும் அ.ஈஸ்வர் மூர்த்தி ஆகியோருக்கு தலா 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், சர்வதேச பாரா கிரிக்கெட் வீரர் ஆ.சண்முகத்திற்கு 1.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், வாள்வீச்சு வீராங்கனை த.தர்ஷினி மற்றும் நீச்சல் வீராங்கனை ந.ஹர்ஷா ஆகியோருக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், தேசிய அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் மீ.ஹரிஹரனிற்கு மலேசியாவில் நடைபெறும் சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்பதற்காக செலவீன தொகையாக 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, பெருமூளை முடக்குவாத மாற்றுத்திறனாளி விளையாட்டு சங்கத்தின் தலைவர் செ.உமாராணி உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

