Skip to content

தான்தோன்றிமலை மாசித் திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா

‘தென்திருப்பதி’ என்று பக்தர்களால் போற்றப்படும் கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில், மாசி மாதத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கித் தற்போது வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளி கருட வாகனச் சேவை இன்று இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு, பின்னர் வண்ண மலர்கள் மற்றும் ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட சுவாமி, வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலய மண்டபத்திலிருந்து மேள தாளங்கள் முழங்கத் திருவீதி உலா புறப்பட்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தைக் காணக் கரூரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். வீதியுலாவின் போது பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” எனப் பக்தி முழக்கமிட்டு சுவாமியை மனமுருகி வழிபட்டனர். வீதியுலா நிறைவடைந்த பின் சுவாமி மீண்டும் ஆலயம் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்குத் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

error: Content is protected !!