Skip to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழ்நாட்டில் 2 நாள் ஆய்வு மேற்கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சிறப்பான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. உலக அளவில் இருந்து பல நாடுகளின் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்ற கூட்டத்தில் குடவேலை முறை குறித்து கூறினேன். தமிழ்நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை கேட்டு அனைவரும் வியந்து பாராட்டினர். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

ஜனநாயக திருவிழாவை தமிழ்நாட்டு வாக்காளர்கள் கொண்டாட வேண்டும். தேர்தல் திருவிழா என்பதே தமிழ்நாட்டின் பெருவிழா. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம். எஸ்பி, டிஐஜி, ஐ.ஜி., தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினோம். தமிழ்நாட்டில் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண்களை விட 12,21,713 பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும்.

தமிழ்நாட்டில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,530 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் 1.05 கோடி பேர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள். மின்னணு வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படங்கள் இடம்பெறும். எந்த வாக்குச்சாவடியிலும் 1200 மேற்பட்ட வாக்காளர்கள் இருக்க மாட்டார்கள். ECINET செயலியில் வாக்குப்பதிவு நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். கடைசி 2 மின்னணு வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதற்கு முன்பு தபால் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்படும். வேட்பாளர் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் விவிபாட்டில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு வித்தியாசம் இருந்தாலும் விவிபேட் வாக்குகள் எண்ணப்படும்.தேர்தல் நாளில், 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும்.

அரசியலமைப்பு சட்டப்படி எவ்வித அச்சம் இன்றி தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாடு மற்றும் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக அமையும்.தேர்தல் அறிவிப்புக்கு பின்பு, தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை புரிவார்கள். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின், 5.67 கோடி வாக்காளர்களில் 216 மேல்முறையீடுகள் மட்டுமே பெறப்பட்டது. தகுதியான வாக்காளர்கள் தற்போதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!