சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் 2-ம் கட்ட பணிகள் 118.9 கி.மீ தொலைவிற்கு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. பூவிருந்தவல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4-ல் சுமார் 26 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் பணி என்பது நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவுள்ள நிலையில், ஏற்கனவே தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை என்பது வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இந்த நிலையில் மேலும் பூவிருந்தவல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் இந்த ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது சான்றிதழ் பெறப்பட்டது.
தற்போது 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கி பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தண்டவாளத்தின் தரம், பயணிகளின் பாதுகாப்பு, ரயில்பெட்டிகளின் வசதி, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டிருந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் பாதுகாப்பு சான்றிதழ் தரப்பட்டது. இதனை தொடர்ந்து பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்க இறுதி ஆய்வு என்பதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்டிருந்தார்.
4 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தண்டவாளத்தின் தரம், பயணிகளின் பாதுகாப்பு, ரயில்பெட்டிகளின் வசதி, கட்டுமானம் குறித்து முதல் 2 நாளும், தொடர்ந்து 3வது நாளில் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கியும், 4-வது நாளில் மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து மெட்ரோ ரயிலை இயக்கியும் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

