ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து அந்த நாட்டின் மீது கடந்த 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஈரானும் ஆவேசமாக பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி அசரடித்து வரும் அந்த நாடு. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.
வளைகுடா பிராந்தியம் முழுவதும் நீடித்து வரும் இந்த போர் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது. இருதரப்பும் எவ்வித இடைவெளியும் இல்லாமல் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘Truth’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
ஈரான் நிபந்தனையற்ற சரணாகதி அடைவது மட்டுமே தீர்வு. ஈரான் அரசுடன் எவ்விதமான சமரசப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. ஈரான் சரணடைந்த பின் அங்கு தகுதியான, ஏற்கக்கூடிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அமெரிக்காவும் நட்பு நாடுகளும் ஈரானை அழிவில் இருந்து மீட்டு பொருளாதார வலிமையான நாடாக்குவோம் என அதில் பதிவிட்டுள்ளார்.
முன்னாதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஈரான் சரணடைந்த பிறகு அங்கு தகுதியான, ஏற்கக்கூடிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுவர். அமெரிக்காவும் நட்பு நாட்களும் ஈரானை அழிவில் இருந்து மீட்டு பொருளாதார வலிமையான நாடாக்குவோம். ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரக்கூடியவரை நாங்கள் விரும்புகிறோம். வெனிசுலாவில் நடந்ததுபோல ஈரான் உயர் தலைவர் நியமனத்தில் அமெரிக்கா ஈடுபட வேண்டும். ஈரான் ராணுவம், காவல்படை தங்கள் ஆயுதங்களை கீழே போடுமாறு அழைப்பு விடுக்கிறேன். புதிய, சிறந்த ஈரானை ஆற்றலுடன் வடிவமைக்க எங்களுக்கு உதவவும் வலியுறுத்துகிறேன் என்றார்.

