ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காடகநல்லி கிராமத்தில் விவசாயி புட்டுசாமி என்பவருக்கு சொந்தமான மக்காச்சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் தந்தத்துடன் கூடிய ஆண் யானை இறந்து கிடப்பதாக கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனச்சரக அலுவலர் சிவசங்கரன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் மக்காச்சோள தோட்டத்திற்கு வந்து யானை மின்வேலியில் சிக்கி இறந்ததை உறுதி செய்தனர்.
இதைத்தொடர்ந்து நிலத்தின் உரிமையாளரான காடகநல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புட்டுசாமி என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர். இறந்த ஆண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து விவசாயி புட்டு சாமி மீது வனத்துறையினர் வழக்குப்பதிந்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்த யானையின் உடலில் இருந்து தந்தத்தை அகற்றிவிட்டு யானையின் உடலை வனப்பகுதிக்கு கொண்டு சென்று பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக வனத்துறையினர் விட்டனர்.

