இறுதி சடங்கில் அதிர்ச்சி… கரூருக்கு வந்தது வேறொருவரின் உடல்: மருத்துவமனையில் அலட்சியச் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி.
கரூர் மாவட்டம் மணல்மேட்டை அடுத்த காளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (66). கடந்த சில நாட்களுக்கு முன்பு சுக்காளியூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு

அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிக்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து இறுதி சடங்குகள் செய்து உடலை எரியூட்டுவதற்கு முன்பாக முகத்தில் இருந்த துணி மற்றும் கவர்களை எடுத்து பார்த்த போது உடல் மாறி இருப்பது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடன் வந்த காவல்

துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த ஆனந்தராஜின் உடலுக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடல் என்பதும், அவை மாற்றி கொடுத்துள்ளது என தெரியவந்தது.
இதனால் இருவரின் உடல்களும் தவறாக மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆனந்தராஜின் உடலை அவர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு திருப்பி ஒப்படைத்தனர்.
இந்நிலையில் கரூரில் இருந்த தேவேந்திரன் உடலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரின் உடல் மாற்றி ஒப்படைத்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
