Skip to content

போர் எதிரொலி..ஏர் இந்தியா விமானங்கள் ரத்து வரும் 13ம் தேதி வரை நீட்டிப்பு

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் சேர்ந்து போர் தொடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு ஆசியா, ஐக்கிய அரபு வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்டு வரும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சர்வதேச விமானங்களும், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் ரத்து, வரும் 13ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பயணிகள் வசதிக்காக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதாவது ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்ய, முன் பதிவு செய்திருந்த பயணிகள், எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல், வேறு எந்த தேதிகளுக்கும் பயணத்தை மாற்றி கொள்ளலாம். அல்லது பயணத்தை ரத்து செய்து, முழு பணத்தையும் திரும்ப பெறலாம். பயணிகள், தங்களின் மாற்று முன்பதிவு அல்லது பயணம் ரத்து பற்றிய கோரிக்கைகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின் இணையதளம் airindia.com மூலம் பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை எண்களான +911169329333/+91116932999 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, சிறப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்த விமான நிலையத்தில் இருந்தும், இந்தியாவின் எந்த நகரத்திற்கும் கூடுதல் கட்டணம் இன்றி, மாற்று விமானங்களில் பயணிக்கலாம்.

துபாய்-ஜெய்பூர் பயணிகள், துபாயில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரஸ் அல் கைமா விமான நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து, டெல்லிக்கு கூடுதல் கட்டணம் இன்றி, விமானத்தில் பயணிக்கலாம். மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள், வாட்ஸ் அப் மூலம் செயல்படும், ஏர் இந்தியா உதவியாளர் +916360012345 எண்ணிற்கு தொடர்பு கொண்டு, விமான மாற்றத்தை மேற்கொள்ளலாம். அதே நேரத்தில் மேற்காசியா நாடுகளுக்கு கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகளையும், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.

error: Content is protected !!