Skip to content

செல்போன் பார்த்ததைக் கண்டித்த பெற்றோர்: 12-ம் வகுப்பு மாணவர் விபரீத முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில், பெற்றோர் செல்போன் பார்த்ததைக் கண்டித்ததால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தேவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதேஷ் என்பவரது மகன் அஜித்குமார் (17), அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த அஜித்குமார் செல்போன் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த பெற்றோர், “தேர்வு நேரத்தில் செல்போன் பார்த்து நேரத்தை வீணடிக்காதே” என்று கண்டித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை பெற்றோர் விவசாய வேலைக்காகத் தோட்டத்திற்குச் சென்றுள்ளனர். காலை 7.30 மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அஜித்குமார் விட்டத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பதைக் கண்டு கதறித் துடித்தனர்.

உடனடியாக அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு நேரத்தில் மாணவர் எடுத்த இந்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!