திருச்சி கூட்டத்தில் அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் எனக் கூறிய நிலையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் கூட்டம் முடிந்தது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு பெருமளவில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து உள்ளது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. மோடி கடந்த 40 நாளில் மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்று விட்டார். இதுவரை தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. திருச்சி கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்போம் என பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். ஆனால் அது போல் எந்த அறிவிப்பும் நேற்று வெளியிடப்படவில்லை.
பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமியை பியூஸ் கோயல் நேரில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் அந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என பியூஸ் கோயல் தெரிவித்தார். தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்பு ஹோட்டலுக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் பியூஸ் கோயல் நேரில் வந்து சந்தித்து பேசினார். அப்போது சந்திப்பில் பல நல்ல செய்திகள் உள்ளது என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டோம். வேறு எதுவும் பேசவில்லை என தெரிவித்தார்.
ஒரே நாளில் மோடி வருவதற்கு முன்பும் மோடி வந்து சென்ற பின்பும் என இரு முறை நடந்த பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு தொடர்பாகவும், அதிக தொகுதிகளை கேட்டு அதிமுகவிற்கு பாஜக நெருக்கடி கொடுக்கத்தான் என தெரிகிறது. அதுவும் இரண்டாவது முறை எடப்பாடி பழனிச்சாமியை பியூஸ் கோயல் சந்தித்தது மோடி கூறி தான் என தெரிகிறது. அதிக அளவு தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கும் பா.ஜ.கவால் எடப்பாடி பழனிச்சாமி செய்வதறியாமல் இருக்கிறார் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இன்னும் தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.நாங்கள் ஒரே குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் தொடர்ந்து கூறி வந்தாலும் இரு தரப்பிலும் இடையே நல்ல உறவு இல்லை என்பது தான் நேற்று இரண்டு முறை நடந்த சந்திப்புகள் காட்டுகிறது.

