கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
கார்த்தியாயினியின் மற்றொரு மகனான மணி, அவரது வீட்டின் அருகில் வசித்து வருகிறார். அவர்தான் தினமும் அவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாலை உணவுடன் வந்த மணி, ரத்த வெள்ளத்தில் தாய் கிடப்பதையும், காயங்களுடன் தேவதாஸ் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர்களை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னதாக அந்த வெறிநாய் மூதாட்டியை தாக்குவதற்கு முன்னதாகவே, அதே பகுதியில் மூன்று நபர்களைக் கடித்துள்ளது. தனது சகோதரன் இரவு உணவுடன் வருவார் என்று வீட்டின் கதவைத் திறந்து வைத்திருந்தநிலையில், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்த தெருநாயை அப்பகுதி மக்கள் தேடி பிடித்து அடித்துக் கொன்றனர். நாயின் உடலை ஆய்வு செய்ததில், அதற்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மூதாட்டியின் உடல் அவரது சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

