ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதில், சமூக ஊடகத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் நெதன்யாகு போன்ற முகம் கொண்ட நபர் ஒருவர் காயத்துடன், இடிபாடுகளுக்கு இடையே காணப்படுகிறார். அவருக்கு வீரர்கள் உதவிடும் காட்சி பதிவாகி உள்ளது.
அவர் மீது நடந்த தாக்குதலில் அவர் காயமுற்றார் என்றும், இதுவே அவருடைய கடைசி புகைப்படம் என்றும் பலர் கூறி வருகின்றனர். எனினும், இது ஏ.ஐ. உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம் அல்லது டிஜிட்டல் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்றாக இருக்க கூடும் என்றும், தாக்குதலில் நெதன்யாகு காயமடைந்ததற்கான ஆய்வு செய்யப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
சமூக ஊடக பயனாளர்கள் சிலர், போரின்போது அவர் கொல்லப்பட்டு விட்டார் அல்லது காணாமல் போய் விட்டார் என புரளிகளை பரப்பி வருகின்றனர். இதற்கு நம்பக்த்தக்க சான்றுகள் எதுவும் இல்லை. நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி வருகின்றார் என்றும், ஊடகத்தினரிடம் தொடர்பு கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
நெதன்யாகு, நடந்து வரும் மோதல் தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றி உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
தொடர்ந்து, ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோன்று இஸ்ரேல் அமைச்சக தகவலின்படி, ஈரானுடன் போர் தொடங்கியது முதல் இஸ்ரேலில் 2,300-க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அயதுல்லா அலி காமேனி மறைவுக்கு பின்னர், ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் தாக்குதலில் காயமுற்றார் என செய்திகள் வெளிவந்தன. எனினும், அவர் எந்த பகுதியில் உள்ளார் என்றோ அல்லது என்ன ஆனார்? என்பது பற்றியோ உறுதியான தகவல் வெளியாகவில்லை.

