Skip to content

ஊட்டியில் 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்… 12 மணி நேர போராடி உயிருடன் மீட்பு

கூடலூர்: ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த இளைஞர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டார். கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை காட்சிமுனை பகுதியில் நேற்று மாலை தடையை மீறி ஆபத்தான பகுதிக்குச் சென்ற வாலிபர் ஒருவர் நிலைதடுமாறி அங்குள்ள 150 அடி பள்ளத்தில் விழுந்து சிக்கிக்கொண்டார். அருகில் இருந்த சுற்றுலா பயணிகள் இதைக் கவனிக்காத நிலையில், படுகாயமடைந்த வாலிபர் தனது செல்போன் மூலம் தான் தங்கியிருந்த விடுதிக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக நடுவட்டம் போலீசார், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியதில் அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே இரவு நேரமானதால் போதிய வெளிச்சமும் இல்லை. இதனால் வாலிபரின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர். ஆனால், அவர் படுகாயம் அடைந்திருந்ததால் கயிறு மூலம் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனிடையே காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், வாலிபர் இருந்த இடத்தின் அருகே வனத்துறையினர் தீ மூட்டி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து 150 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபரை மீட்க ராணுவ வீரர்கள் உபகரணங்களுடன் குன்னூரில் இருந்து கூடலூருக்கு புறப்பட்டனர். நேற்று இரவு 10 மணிக்கு ராணுவ வீரர்கள் ஊசிமலை காட்சி முனைக்கு வந்தனர்.தொடர்ந்து வாலிபரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பள்ளத்தில் விழுந்த வாலிபர் சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த சிவகுருநாதன் (வயது 28) என்பது தெரியவந்தது. இந்நிலையில் செல்பி எடுக்கும் போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராணுவ மீட்பு மற்றும் மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்ட சிவகுருநாதன், படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!