தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுகவா? திமுகவா? என்பது தான் போட்டி. அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? என மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள் என செல்லூர் ராஜு பேட்டியளித்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர், இதன் பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் “தவெக, திமுகவை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து உள்ளனர், எடப்பாடியாரை முதல்வராக்க மாற்றுக் கட்சியினர் அலை, அலையாக அதிமுகவில் இணைந்து கொள்கிறார்கள். அதிமுகவுடன் தவெக கூட்டணி என நாங்கள் சொல்லவில்லை, அதிமுகவுடன் தவெக கூட்டணி என திமுக திட்டமிட்டு செய்தியை பரப்பி வருகிறது, திமுகவில் வெட்டு, குத்து நடக்கிறது, திமுக கூட்டணியில் சலசலப்பு நடைபெற்று வருகிறது, திமுகவில் இருந்து அதிமுகவுக்கு வருபவர்களுக்கு எங்களால் உழைப்பு மட்டுமே கொடுக்க முடியும், எங்களால் வேறு எதையும் கொடுக்க முடியாது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணி மிக வலுவாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றியடையும்.
தேர்தலில் கூட்டமாக செல்வது பெரிதல்ல. யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் முக்கியம். எடப்பாடி பழனிச்சாமி நல்லவர், நிர்வாக திறன் மிக்கவர் என மக்கள் சொல்கிறார்கள். தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும் அதிமுகவா? திமுகவா? என்பது தான் போட்டி. அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? என மக்கள் பார்த்து வாக்களிப்பார்கள். அதிமுக குறித்து யார் யார் என்ன சொன்னாலும் அதற்கு நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை. தேர்தலுக்காக திமுக அரசு மதுரையில் சாலை அமைத்தது. ஆனால், தரமற்ற சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது. பெண்கள் மஞ்சள் பூசி சென்றால் அழகாக இருக்கும். மஞ்சள் பூசி செல்லும் பெண் திடீரென பவுடர் பூசி சென்றால் நேற்று வரை எப்படி சென்றால் என பெண்கள் பேசுவார்கள். மஞ்சள் குங்குமம் வைத்து சென்றால் மகாலெட்சுமி செல்வதாக சொல்வார்கள். திடீரென மூர்த்தி மேற்கு தொகுதியில் சாலை உள்ளிட்ட பணிகள் தொகுதியில் வேலை பார்ப்பது இப்படித்தான்” என பேசினார்.
