கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் வழியாகச் சென்ற டெம்போ ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையைக் இருந்த மயில் மீது மோதியது. இதில் அடிபட்ட மயில், பறக்க முடியாமல் சாலையோரத்தில் துடித்துக் கொண்டு இருந்தது. விபத்து நடந்தவுடன், அங்கு இருந்த சில நபர்கள் காயம் அடைந்த மயிலைப் பிடிப்பதற்காக அதன் அருகில் சென்றனர். மயில் காயம் அடைந்த நிலையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதனைத் பிடித்து தொகையை பறிக்க முயன்ற அந்த நபர்களை, அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தினர். பின்னர், படுகாயம் அடைந்த மயிலுக்குச் சுற்றி இருந்தவர்களின் உதவியுடன் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காயம் அடைந்த மயிலை பிடித்து சிகிச்சைக்காக விலங்குகள் நல மையத்திற்கு கொண்டு சென்றனர்.
தேசியப் பறவையான மயிலுக்குத் தீங்கு விளைவிப்பது அல்லது அதைக் காயப்படுத்துவது வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (Wildlife Protection Act) கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். விபத்து ஏற்பட்டால், மயிலைப் பிடிக்கவோ அல்லது துன்புறுத்தவோ முயற்சி செய்யாமல், உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றனர்.
சமூக ஆர்வலர்களின் துரிதமான செயல்பாட்டால், தேசியப் பறவையான மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
