பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 450 கி.மீ.லிருந்து 800 கி.மீ. ஆக உயர்த்தி, புதிய ஏவுகணைகளை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மோதலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது. இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றமாக, 800 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தை தாக்கும் திறன் கொண்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் அதிவேகமாக (சூப்பர்சோனிக்) பாய்ந்து, நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. இந்தியாவிடம் சுமார் 450 கி.மீ. வரை தாக்கும் ஏவுகணைகள் இருந்தாலும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு, எதிர்காலத் தேவைகளை முன்னிட்டு இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை மேலும் அதிகரிக்கும் என்றும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

