அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மீது மாணவி ஒருவர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது, தனது ஏழ்மையைப் பயன்படுத்தி பண உதவி செய்து அத்துமீறியதாக மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பேராசிரியர் ஞானவேல் பாபுவை சஸ்பெண்ட் செய்துள்ளது.
மாணவி தனது புகாரில், கடந்த மூன்று ஆண்டுகளாக பேராசிரியர் ஞானவேல் பாபு தன்னிடம் போனில் மற்றும் நேரிலும் தவறான நோக்கத்துடன் பேசி தொல்லை கொடுத்து வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி பண உதவி செய்வதாகக் கூறி, பலமுறை அத்துமீற முயற்சித்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடனேயே, பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பல்கலைக்கழகம் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழகத்துக்கு உள்ளது என்பதால், இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வளாகங்களில் பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். “அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என கூறியுள்ளார்.

