தமிழ்நாட்டில் 2026 காண சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
ஏற்கனவே 23 வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 127 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். இந்த பட்டியலில் தற்போது பதவி வகித்து வரும் 46 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மொத்தம் 150 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில் 17 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பெண்களில் லீமா ரோஸ் மார்ட்டின் பெயர் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில், லால்குடி சட்டமன்ற தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து சமீபத்தில் விலகி அதிமுகவில் இணைந்த லீமா ரோஸுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகினார்.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17 ஆம் தேதி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியை லீமா ரோஸுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்காக லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை களத்தில் இருந்து செய்துவந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்களை கவரும் வகையில், இலவச பொருட்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இணைந்த லீமா ரோஸுக்கு ஒரே மாதத்தில் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2006,2011,2016, 2021 நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு திமுக வெற்றி பெற்று லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக வசம் உள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் ஏ. சௌந்தர பாண்டியன் வேட்பாளராக நியமிக்கப்பட்டு 84,914 பெற்று வெற்றி பெற்றார். 48.93% சதவீதம் பெற்று இருந்தார். அதேபோல் கடந்த முறை அதிமுக சார்ப்பில், டாக்டர் தர்மராஜ் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். 67,965 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.

