Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசுக்கு சம்பந்தமே இல்லை… விஜய் பிரச்சாரம் விவகாரத்தில் மா.சு பதில்

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதன் பின்னணியில் திமுக அரசு இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெரம்பூர் பகுதியில் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை “ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட பாசிசத் தாக்குதல்” என்று விஜய் விமர்சித்தார். அதிகாரிகள் சிலரின் துணையுடன் திமுக அரசு தவெகவுக்கு தொல்லை கொடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, இன்று சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன், விஜய்யின் குற்றச்சாட்டுக்கு தெளிவான பதில் அளித்தார். “மீட்டிங் யாரு அனுமதி தரணும்ன்றத மொதல்ல தெரிஞ்சுக்கணும். இப்ப தேர்தல் காலம். Code of Conduct அமலில் உள்ளது. இதில் அரசுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், “தேர்தல் ஆணையம் இப்போது மிகவும் எளிமைப்படுத்தியுள்ளது. Suvidha என்ற ஆப் மூலம் 48 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தால் போதும். எந்த இடத்தில், எத்தனை மணிக்கு, எவ்வளவு பேர் கலந்துகொள்வார்கள் என்ற விவரங்களைப் பதிவு செய்தால், 48 மணி நேரத்துக்குள் அனுமதி தானாகவே கிடைத்துவிடும். இதற்கு அரசு நிர்வாகத்துக்கோ, காவல்துறைக்கோ, மாநகராட்சிக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

அதனைத்தொடர்ந்து, “அனுமதி கேட்டு 48 மணி நேரத்துக்கு உள்ளே விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி கிடைக்கும். 20 மணி நேரம் அல்லது 18 மணி நேரத்துக்கு முன்பு விண்ணப்பித்தால் அனுமதி நிராகரிக்கப்படும். இதில் திமுகவோ, அரசோ எந்தப் பொறுப்பும் இல்லை. அனுமதி கிடைத்த பிறகு ஏதாவது தொல்லை கொடுக்கப்பட்டதா என்று ஆதாரத்துடன் சொல்லுங்கள். அப்படி எதுவும் இல்லை” என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இறுதியாக மா. சுப்பிரமணியன், “இடங்கள் கூட தேர்தல் ஆணையம்தான் நிர்ணயம் செய்கிறது. தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், எத்தனை பேர் அனுமதி, எவ்வளவு நாற்காலி, எவ்வளவு செலவு என அனைத்தையும் தேர்தல் ஆணையமே முடிவு செய்கிறது. இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று தெளிவுபடுத்தினார்.

error: Content is protected !!