உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும், கூலி வேலைகளுக்கும் சென்று தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக பர்சாவால் என்ற கிராமத்திற்கு பப்லு சென்றுள்ளார். அங்கு அவர் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த கிராமத்தை சேர்ந்த சங்கர் யாதவ் (50) என்ற நபருக்கும் பப்லுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், தன்னிடம் இருந்த அரிவாளை எடுத்து பப்லுவின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும், அதே இடத்தில் வைத்து பப்லுவின் தலையை சங்கர் யாதவ் வெட்டி துண்டித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தைக் கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆனால் சங்கர் யாதவ் எதுவும் நடக்காதது போல் மிக சாதாரணமாக பப்லுவின் வெட்டப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றார். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலிறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சங்கர் யாதவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
போலீசார் சங்கர் யாதவை கைது செய்ய அவரது வீட்டிற்குள் நுழைந்தபோது, அவர் பப்லுவின் தலையை பக்கத்தில் வைத்துக் கொண்டே தனது சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சங்கர் யாதவின் வீட்டில் இருந்து பப்லுவின் தலையையும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பட்டப்பகலில் பொது இடத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ஐஸ்கிரீம் விற்க சென்ற பப்லு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்து அவரது மனைவியும், குழந்தைகளும் அழுது புலம்பிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

