திருச்சி, தென்னர் உணவு சந்தையில் இன்று திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் முக. ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். உழவர் சந்தை பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கானனோர் திரண்டு இருந்தனர். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மேடை அருகே நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருவரது கழுத்தில் இருந்த நகை மற்றும் பணத்தை அருகில் இருந்த 2 பேர் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனை பார்த்து அந்த பெண் கூச்சல் போடவே அருகிலுள்ள பொதுமக்கள்,திமுக தொண்டர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அந்த 2 மர்ம ஆசாமிகளை தில்லை நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மர்ம ஆசாமிகள் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்தில் பெண்ணிடம் நகை, பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

