ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு பெண் ஒருவர் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் அவர் சாலையில் நின்று கொண்டு நீதிமன்றத்தினுள் பெட்ரோல் நிரப்ப பட்ட பாட்டிலை விட்டெறிய தான் முயன்றார். ஆனால் அவர் தீயை பற்ற வைத்து விட்டெறிந்த பாட்டில், சுற்றுசுவரை தாண்டி நீதிமன்ற வளாகத்திற்குள் விழாமல், சுவற்றில் பட்டு மீண்டும் அந்த பெண்ணின் அருகே இருந்த வாகனங்கள் மீதே விழுந்தது. இதில் அருகில் இருந்த வாகனங்களில் சில தீ பற்றி எரிய துவங்கின.
குறிப்பிட்ட பெண் இந்தச் செயலில் ஈடுபடுவதை காட்டும் வீடியோ ஒன்று வெளியானதை தொடர்ந்து, காவல்துறையினரால் அந்த பெண் காவலில் எடுக்கப்பட்டார். அவர் இந்த செயலில் ஈடுபடும் முன் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் தான் செய்ய போகும் செயலை வீடியோ எடுக்குமாறு தனது மொபைலை கொடுத்து கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள் தீயை விட்டெறியும் முயற்சியில் தோற்றவுடன் உடனடியாக தனது மொபைலை வாங்கி கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார்.
எனினும் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, இதனை தொடர்ந்து சில மணி நேரங்களுக்குள் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் பாட்டில்களில் பெட்ரோலை பெற்றதாகக் கூறப்படும் பெட்ரோல் நிலையத்திற்கு சென்று காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சம்பவம் குறித்து கூறிய காவல் அதிகாரி ஒருவர், அந்த பெண் எரியும் பாட்டில்களை உயர் நீதிமன்றத்தை நோக்கி வீசினார், அதிர்ஷ்டவசமாக, அவை வளாகத்தை அடையாமல் வாகனங்கள் மீது விழுந்தன. பாட்டில்கள் நீதிமன்ற வளாகத்தினுள் விழுந்திருந்தால் அது உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கும்” என்றார். கைது செய்யப்பட்ட பெண் நிகழ்த்திய இந்த இந்த மோசமான சம்பவத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒரு கார் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இது பாதுகாப்பு குறைபாட்டைக்காட்டுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஜகத்சிங்பூர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் எதற்காக இப்படி செய்தார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி பிரதமரின் கவனத்தை ஈர்க்க அந்த விரும்பியதாகவும், அதனால் தான் அப்படி செய்ய துணிந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் என காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

