தேர்தலுக்கு சிலநாட்களே உள்ள நிலையில் கூட, இதுவரை தமிழ்நாட்டில் அதிமுக தான் முதலமைச்சர் வேட்பாளர் என மோடி, அமித்ஷா ஆகியோர் சொல்லவில்லை: பீகார், மஹாராஷ்டிரா போன்று கூட்டணி கட்சியின் ஆட்சியை பறிக்கப் போவதில்லை. மாறாக அதிமுக எனும் கட்சியையே பாஜக விழுங்கப் போகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு.
அரியலூர் தொகுதி திமுக வேட்பாளர் லதா பாலுவை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று அரியலூரில் நடைபெற்றது. மாவட்ட

செயலாளரும், அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்பொழுது பேசிய அவர்…
நடைபெறுகின்ற தேர்தல் என்பது டெல்லிக்கும், தமிழ்நாட்டிற்குமான தேர்தல். இதில் வெற்றி பெற வேண்டியது நாம். நாம் என்றால் அது தமிழ்நாடு என்பதை தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் பாஜக பின்வாசல் வழியாக ஆட்சியை கைப்பற்றி வருகிறது.
ஆறு மாதத்திற்கு முன்பாக பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ்குமாரை முதலமைச்சர் என மோடி பிரச்சாரம் செய்தார். அங்கே தன்னுடைய கட்சியான பாஜக தான் முதலமைச்சர் என்று சொல்லி இருந்தால், பீகாரிலே நிதிஷ்குமார் வெற்றி பெற்றிருக்க முடியாது.
நம்முடைய தமிழ்நாடு, கேரளாவை போல வடநாட்டில் பீகார் வித்தியாசமான மாநிலம். அங்கே பாஜகவின் பாட்ச்சா பலிக்காத மாநிலம். நிதீஷ்குமார் தான் முதலமைச்சர் என மோடி பிரச்சாரம் செய்தார். இன்னும் ஆறு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது அங்கே நிதிஷ்குமாரை ராஜினாமா செய்ய சொல்லியுள்ளார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக, பதவியேற்று தனது சட்டமன்ற மேல் சபை பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவியேற்ற 6 மாதத்திலேயே நிதீஷ்குமார் பதவியை பிடுங்கும் படுபாதக செயலைதான் பாஜக இன்று செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஒரு ஆட்சியை குலைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக்கினர். அடுத்த ஆறு மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் வென்ற பிறகு ஏக்நாத் சிண்டேவிற்கு அல்வா கொடுத்து, பிஜேபி அங்கே முதலமைச்சர் பதவியை பிடுங்கிக்கொண்டது.
நிதீஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கெல்லாம் ஆட்சி மட்டுமே போனது. ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கப்போகிறது? என்றால், எடப்பாடி வசம் ஆட்சி இல்லை, மாறாக கட்சி உள்ளது. தற்பொழுது அதிமுக எனும் கட்சியை பாஜக விழுங்க போகிறது.
அதைத்தான் நம்முடைய முதலமைச்சர் அதிமுகவினரிடம் இரண்டு வருட காலமாக குறிப்பிட்டு வருகிறார்கள். விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் கட்சியை கூட்டணி என்ற பெயரில், பாஜக குழி தோண்டி புதைக்கிறது. கொல்லைப்புற வழியாக பாஜக தமிழ்நாட்டுக்கு வர துடிக்கிறது. தன் மீதுள்ள வழக்குகளுக்கு பயந்து கொண்டு அதிமுகவை அடமானத்தை வைத்து எத்தனை சீட்டு என்று அறிவிப்பதற்கு கூட டெல்லி போய் சென்று ஒப்புதல் வாங்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தற்போதுவரை கூட அமித்ஷா, மோடி போன்றவர்கள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என்றோ, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் என்றோ அறிவிக்கவில்லை. NDA கூட்டணி ஆட்சி என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். இதிலிருந்து பாஜக எந்த அளவிற்கு அதிகார மமதையில், பாசிச மனநிலையில் இருக்கிறார்கள் என்பது புரிகிறது. அந்த பிஜேபி தமிழ்நாட்டில் உள்ளே நுழையாமல் இருப்பதற்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு ஒரு விடுதலை போராக இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவதை வைத்து, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அது முன்னுதாரமாக அமையும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உரை நிகழ்த்தினார்.

