Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

கள்ளக்காதல் விவகாரம்: பால்காரர் மீது தாக்குதல் -.. 4 பேர் மீது வழக்கு

திருச்சி மாவட்டம் முசிறி ஆரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29). இவர் அப்பகுதியில் பால் கூட்டுறவில் பால் விநியோகம் செய்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார். இந்நிலையில், வரதராஜபுரத்தைச் சேர்ந்த குருபிரகாஷ் (35) என்பவர் அந்த பெண்ணிடம் பால் ஊற்றி வந்தபோது, அவருக்கும் இளம்பெண்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை மதன்குமார் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குருபிரகாஷ், தீபன் சக்கரவர்த்தி மற்றும் இருவர் மதன்குமாரை வழிமறித்து கட்டை மற்றும் கற்களால் சரமாரியாகத் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மதன்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இளம்பெண்ணிடம் வம்பு செய்ததை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

திருச்சியை அடுத்த முசிறி கள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (26),இவர் தனது கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிடம் அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில், சூர்யா தனது நண்பர்களான பிரபல ரவுடி பிரவீன் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் சேர்ந்து பிரதீப்பை வழிமறித்து தாக்கினார்.
தகவலறிந்து வந்த பிரதீப்பின் நண்பர்கள் கரண், சந்துரு, பெரியசாமி, வீரமலை ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாள் மற்றும் கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. காயமடைந்த அனைவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பிரதீப் அளித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மதுபான ஊழியர் அரிவாளால் வெட்டி கொலை.. சிற்றுண்டி தராததால் விபரீதம்

திருச்சி அருகே சோமரசம்பேட்டையைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (40). இவர் வியாழன்மேடு பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை பார் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். கடந்த 20-ஆம் தேதி பணியில் இருந்தபோது, அங்கு வந்த செல்வகுமார் என்பவர்க்கு சைட் டிஷ் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில், சிக்கந்தரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே சிக்கந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சுசிலாதேவி சோமரசம்பேட்டை போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக செல்வகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் தீயில் கருகி சாவு..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இனாம் சமயபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (64). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த இவர், தனது வீட்டில் சிகரெட் பற்றவைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் 65 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கரணிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் காவியா (வயது 19). இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சிறுவயது முதலே காவியாவிற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த தொடர் நோயால் மனமுடைந்த காணப்பட்ட காவியா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!