வாலிபர் மூச்சு திணறி சாவு
திருச்சி மே 6- திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு முகமது பூரா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சையது ஹவுஸ் இவரது மகன் சையது அப்துல்லா (வயது 26) வீட்டிலிருந்த சையது அப்துல்லாக்கு கடந்த 4 ந்தேதி திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் சையது அப்துல்லா இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை அளித்தவர் கைது
திருச்சி திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயது மதிக்கத்தக்க பெண் மேலூர் சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி சாதிப் பெயரை சொல்லி திட்டி உள்ளார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலூர் மேலத்தெருவை சேர்ந்த நாகரத்தினம் (வயது40) என்பவரை கைது செய்தனர்.
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் சாவு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரேவதி (வயது 58) இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 ந் தேதி இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலம் அருகே அழுகிய நிலையில் கிடந்த முதியவர்
திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 59) இவரது மனைவி இறந்த பிறகு இவரின் மகன் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதன் காரணமாக அவரது மகன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் மாரியப்பன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 30-ந்தேதி இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பாலக்கரை எடத்தெரு பாலம் அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

