திருச்சி திருவெறும்பூர் அடுத்த துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி டயாலிசிஸ் படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 15 நாட்கள் ஒன்றாக வசித்தனர். பின்னர் போலீசார் அவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2-ந் தேதி பிரவீனுடனான காதலை மாணவி துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், மாணவியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமாகவும், மிரட்டல் விடுத்தும் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் மாணவியின் வீட்டிற்குச் சென்ற பிரவீன், அவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதோடு, மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியைக் காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர்.

