தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இதுவரை 9 அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொழிலாளர் நலன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகள் முழுமையான நிர்வாக கவனத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் அமைச்சரவை விரிவாக்கம் காலதாமதம் ஆகிறது.
இந்நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் நாளை சென்னை வருகிறார். விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் நாளை மறுநாள் பதவியேற்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்., கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் எம்எல்ஏ மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையில், கூடுதல் பெண் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
