காதலித்து ஏமாற்றியதாக, சென்னை ராயபுரத்தில் மணமகனின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் ஆதரவாளர் மீது தாக்கப்பட்ட விவகாரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏவுக்கும், காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும், சூளைமேடு பகுதியில் வசிக்கும் சையது இப்ராஹிம் என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. காதலுக்காக அந்தப் பெண், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய நிலையில், சையது இப்ராஹிமுக்கு வேறு ஒரு பெண்ணுடன், ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் வைத்துத் திருமணம் நடைபெற இருந்தது.
இதனை அறிந்த அந்தப் பெண், தனது ஆதரவாளர்களுடன் மண்டபத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. காவல் ஆய்வாளர் சிதம்பரம் பாரதி, இளம் பெண்ணின் ஆதரவாளர் கலில் அகமதுவைத் தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையறிந்து காவல் நிலையம் சென்ற ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பொதுமக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது எனக் காவல் ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
