கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தலாடம்பட்டி ஊரணி மேடு பகுதியில் வசிக்கும் கதிரேசன் – சாந்தி தம்பதியினரின் மகள்கள் பவ்யாஸ்ரீ மற்றும் பாவனா ஸ்ரீ ஆகியோர், காந்திகிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தனர்.
வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், இருவரும் 500- 476 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ் பாடத்தில் இருவரும் 98 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், மற்ற பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மொத்த மதிப்பெண் ஒரே அளவில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தனித்தனியாக படித்து, ஒருவருடன் ஒருவர் ஆலோசனை செய்யாமல் தேர்வு எழுதியதாக தெரிவித்துள்ள இரட்டைச் சகோதரிகள், ஒரே மதிப்பெண் பெற்றது தங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததாக கூறினர்.
மேலும், இருவரும் பயோலஜி பிரிவு தேர்வு செய்து எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்பது தங்களின் கனவு என தெரிவித்தனர்.
