Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 வயது மகளை கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை

மதுரை செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (30). இவருக்கும், பெத்தானியாபுரம் அண்ணா வீதி பகுதியை சேர்ந்த முத்து (25) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 5 வயதில் துளசி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை அப்பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் படித்து வந்தது.

தற்போது கோடை விடுமுறை காரணமாக முத்து, தனது மகள் துளசியுடன் பெத்தானியாபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சுந்தரபாண்டி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்தார். அப்போது பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் தாய் வீட்டில் இருந்து வருகிறேன் என அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுந்தரபாண்டி அங்கிருந்து சென்று விட்டார்.
கணவர் அழைத்ததால் வீட்டிற்கு செல்லும்படி முத்துவின் தாய் அவரிடம் அறிவுறுத்தி உள்ளார். இதில் முத்துவுக்கும், அவரது தாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்து, யாரிடமும் பேசாமல் மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் தனது குழந்தையை முதலில் கொலை செய்யவும் முடிவெடுத்தார். அதன்படி வீட்டில் கிடந்த கயிறை எடுத்து வந்து தனது குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அதே அறையில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வெளியே சென்றிருந்த முத்துவின் தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது குழந்தை துளசி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், மகள் முத்து தூக்கில் பிணமாக கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தை மற்றும் முத்துவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் குழந்தையை கொலை செய்து விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!