Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐசரி கணேஷுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.

அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது மனுவில், “ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அரசு மருத்துவர் பாலாஜிநாத் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, விசாரணையில் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி வழக்கை முடித்து வைத்து அறிக்கை அளித்துள்ளது.

இதனால், ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் இதுவரை ஏற்றுக் கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு, இந்த வழக்கை தாக்கல் செய்யுங்கள் என ஐசரி கணேசுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து அமலாக்கத் துறை விசாரணைக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய தொடரப்பட்ட மனுவை வாபஸ் பெறுவதாக ஐசரி கணேஷ் தரப்பில் தெரிவித்ததை ஏற்ற நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

error: Content is protected !!