டி.கே.சிவக்குமாருக்கு வழிவிடுகிறாரா சித்தராமையா? காங்கிரஸ் அரசியலில் பரபரப்பு
கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியாகியதையடுத்து கர்நாடக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அப்போது முதலமைச்சர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமரச முடிவு எடுத்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவின.
“இப்போது டி.கே.சிவக்குமாரின் நேரம்” – ஆதரவாளர்கள் கோரிக்கை
சித்தராமையா முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது டி.கே.சிவக்குமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் அதிகாரப் போட்டி வெடித்தது.
இந்த சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை – பின்னர் ராஜினாமா அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து, இன்று காலை தனது இல்லத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா சிற்றுண்டி விருந்து ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் மேலிடம் இன்னும் வெளியிடவில்லை.
கர்நாடக அரசியலில் அடுத்த கட்டம் என்ன?
சித்தராமையாவின் ராஜினாமா அறிவிப்பு கர்நாடக அரசியலில் புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நீண்டகாலமாக நிலவி வந்த காங்கிரஸ் உள்கட்சி அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், டி.கே.சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்றால், கர்நாடக காங்கிரஸில் புதிய அதிகார மையம் உருவாகும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
