கரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் உள்ள 74 டாஸ்மாக் கடைகளை அடைத்து, மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர் தொழில்பேட்டையில் அமைந்துள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நான்காவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாவட்டத்திலும் இன்று முதல் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 74 டாஸ்மாக் கடைகளையும் அடைத்து, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சுமை தூக்கும் கூலி வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை புதிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் மேலாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உதயகுமார் – ஊழியர்
- சுரேஷ் – ஊழியர்
