ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (40). கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைபவானி (35). இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள், திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்துள்ளனர்.
கலைபவானி வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இஸ்திரி கடை வைத்திருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (36) என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். வீடு கட்டும் பணிக்கு பல வகைகளிலும் உதவி செய்துள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே, வீடு கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தி, அந்த வீட்டிற்கு குடிவந்தனர். பின்னர், கலைபவானி முருகனிடம் பேசுவதை குறைத்துள்ளார். முருகனுடன் இருந்த தொடர்பையும் துண்டித்ததுடன் சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், கலைபவானியிடம் சண்டை போட்டுள்ளார். இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் முருகன் கலைபவானியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதும் தகராறுஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கலைபவானியை சரமாரி வெட்டியுள்ளார். இதில் கலைபவானி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பொதுமக்களை பார்த்ததும் முருகன் அங்கிருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு தாவிக்குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது, மாடியிலிருந்து தவறிவிழுந்து முருகனின் கால் எலும்பு முறிந்தது. பொதுமக்கள் முருகனை சுற்றிவளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவேற்காடு போலீசார், முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கலைபவானி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
