தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 108 இடங்களில் வெற்றியைப் பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
இந்த தேர்தலில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் அதில் எந்த தொகுதியை தக்க வைக்கப் போகிறார். எந்த தொகுதியை ராஜினாமா செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. இறுதியில் முதலமைச்சராக பதவியேற்ற போது திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தனக்கு மகத்தான வெற்றியை அளித்து மகுடம் சூடிய திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்து நாளை திருச்சிக்கு விஜயம் செய்கிறார்.
சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார் பின்னர் கார் மூலமாக பிரம்மாண்ட ரோடு ஷோவாக டிவிஎஸ் டோல்கேட், பால்பண்ணை, சஞ்சீவி நகர், சத்திரம் பஸ் நிலையம் வழியாக திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்துக்கு செல்கிறார். அப்போது காரில் அமர்ந்தபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி செல்கிறார். பின்னர் ஜோசப் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தனது பிரத்யேக பிரச்சார வாகனத்தில் நின்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.
இதற்காக கல்லூரி மைதானத்தில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் 5000க்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட உள்ளன. இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு
பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு பின்னர் காரில் திருச்சி விமான நிலையம் புறப்பட்டு மீண்டும் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் விஜய்யின் முதல் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வாக இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் நடக்கிறது. முதலமைச்சர் விஜய் கட்சி ஆரம்பித்து முதல் மக்கள் சந்திப்பு நிகழ்வை திருச்சியில் நடத்தினார்.
இதில் இளைஞர்கள் இளம் பெண்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து ஆரவாரத்துடன் அவருக்கு ஆதரவை அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து டிவிஎஸ் டோல்கேட் தலைமை தபால் அலுவலகம் பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு மக்கள் கடலில் நீந்து செல்ல சுமார் 7 மணி நேரம் பிடித்தது. இது அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கினை உலகுக்கு பறைசாற்றியது. அந்த வகையில் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் மீண்டும் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்வை நன்றி தெரிவிப்பு கூட்டம் மூலமாக திருச்சியை அவர் தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், ரமேஷ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் முன்னாள் அமைச்சர் கு. ப. கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
