Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விமான கட்டண உயர்வுக்கு பிரேக்!

₹10,000 கோடி ஜெட் எரிபொருள் நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய கிழக்கு போர் தாக்கம் எதிரொலி… விமான சேவையை காப்பாற்ற மத்திய அரசின் அதிரடி முடிவு!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்திய விமானத் துறைக்கு பெரும் நிவாரணமாக மத்திய அமைச்சரவை ₹10,000 கோடி மதிப்பிலான விமான எரிபொருள் விலை நிலைப்படுத்தும் நிதிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

கடந்த மார்ச் மாதத்தில் லிட்டருக்கு ₹60.5 ஆக இருந்த விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை, மே மாதத்தில் ₹142 ஆக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்களால் ஏற்பட்ட இந்த விலை உயர்வு, இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளது. விமான நிறுவனங்களின் மொத்த செலவுகளில் சுமார் 40 சதவீதம் வரை எரிபொருள் செலவு இருப்பதால், இந்த உயர்வு துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக ₹10,000 கோடி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு நிலையான விலையில் எரிபொருள் வழங்கப்படும். உள்நாட்டு விமான சேவைகளுக்கான ATF விலை லிட்டருக்கு ₹75.6 என்ற அளவில் கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை இயக்கும் இந்திய விமான நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை திடீர் உயர்வால் விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதுடன், பயணிகளின் மீது கூடுதல் கட்டணச் சுமை விழுவதையும் இந்த திட்டம் தடுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிதி உதவி 36 மாதங்கள் வரை அமலில் இருக்கும். திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம், பெட்ரோலியம் அமைச்சகம் மற்றும் செலவினத் துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வான்வெளி மூடல், மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்திய விமானத் துறை கடுமையான அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை விமான சேவைகளின் தொடர்ச்சியையும், விமான நிலையங்களில் செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விமானத் துறை பங்குகளில் நேர்மறை எதிர்வினை பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களின் பங்குகள் உயர்வைக் கண்டுள்ளன. விமான பயணிகளுக்கு கட்டண உயர்வு அழுத்தம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

error: Content is protected !!