கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு – ரவுடி கைது
திருச்சி காட்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண் குமார் (36). இவர் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 5_ந்தேதி வேலைக்கு அரியமங்கலம் கணபதி நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த ரூ. 1000 பறித்து சென்றார். குறித்து அவர் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ரவுடி அருண்குமார் (34) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமண விழாவில் வாகனம் திருடிய 2 பேர் கைது
திருச்சி தென்னூர் பென்சனர் தெருவை சேர்ந்தவர் ஷேக் இப்ராஹிம் (வயது 41). இவர் கடந்த 1-ந் தேதி திருமண விழாவிற்காக தனரத்தினம் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த அவர் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பீமநகர் பகுதியை சேர்ந்த வீரபாண்டி ( 30) , சோமரசம் பேட்டை பகுதியை சேர்ந்த அமீர் கான் (34) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரயில்வே ஊழியர் மயங்கி விழுந்து சாவு
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராபர்ட் சேவியர் (வயது 68). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பொன்மலை காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டுகள் விற்பனை- மூதாட்டி கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் அப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தாரநல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் (60) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் நானூறு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
