போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் அருகில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது இரண்டு பேர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்த போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 39) இளையராஜா (வயது 44) என்பது தெரிய வந்தது. இதில் இளையராஜா ரவுடி பட்டியலில் உள்ளார். பிறகு மேற்கண்ட இரண்டு பேரையும் போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மாத்திரை சலைன் பாட்டில், ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கஞ்சா விற்பனை செய்தவர் கைது
திருச்சி பாபு ரோடு அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பீரங்கி குளத் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ சங்கர் (வயது 41)என்பவரை கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாராயண ராவ் கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.பிறகு கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர் ஜாமீனில் போலீசார் விடுதலை செய்தனர்.
ஸ்ரீரங்கத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருச்சி கல்லணை ரோடு காவேரி ஆற்று பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அரை யூனிட் மணலை 3 பேர் திருடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிவிட்டார். பின்னர் பிடிபட்ட இருவரிடம் விசாரணை செய்தபோது மண்ணச்சநல்லூர் வாத்தலை பகுதியை சேர்ந்த சிவராஜ் (35) குடி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரை யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய செங்கல் சூளை அதிபரை போலீஸ் தேடி வருகின்றனர்.
