கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்
திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வில்லியன் அலெக்சாண்டர் (வயது 30.) சம்பவத்தன்று இவர் பாபு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவா நகர் சீரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த ரவுடியான விக்கி என்ற விக்னேஷ் 25 என்பவர் வில்லியன் அலெக்சாண்டரிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விக்கி என்ற விக்னேஷ் கைது செய்தனர்.
போதை மாத்திரைகள் விற்பனை – 2 பேர் கைது
திருச்சி மாம்பழ சாலை ரயில்வே ஓ மேம்பாலம்அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 29) , திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த கிஷோர் கான் ( 19 ) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 12 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலைப் பொருட்கள் விற்ற 2 பேர் கைது
40 கிலோ புகையிலை மற்றும் பணம் பறிமுதல்
திருச்சி தில்லைநகர் தென்னூர் சின்னச்சாமி நகர் பகுதியில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தில்லைநகர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜமால் மொய்தீன் 62 என்பதும், இவர் அப்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ரஷ்யா பேகம் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து 40 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்கள் மற்றும் ரூபாய் 17056 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
டீக்கடை ஊழியர் திடீர் சாவு
திருச்சி சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் வயது 65. திருமணம் ஆகாத இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வரண்டாவில் தங்கி இருந்து ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக லக்ஷ்மணனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குஅவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
திருச்சி புதூர் விஸ்வ நாயக்கன் பேட்டை தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது 43. இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மோட்டார் சைக்கிளை திருடியது உறையூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கண்ணன் 19 மற்றும் புதூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ் நிரஞ்சன் 18 என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்
