ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கம்ஹரியா கிராமத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பருவமழை பெய்யாததால் கிராம மக்கள் கவலையடைந்தனர். ஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற தங்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி, ஜதின் கதுவா (29), கலந்தி நாயக் (27) ஆகிய இரு வாலிபர்களுக்குத் திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை சித்தேஸ்வரி கோவிலில் மணமகன், மணமகள் கோலத்தில் வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. கிராமத்தைச் சேர்ந்த இரு பெரியவர்கள் இவர்களுக்குப் பெற்றோராக இருந்து சடங்குகளை நடத்தினர். திருமணத்திற்கு வந்திருந்த மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது. சடங்குகளின்படி ஒரு நாள் முழுவதும் ஒன்றாகத் தங்கியிருந்த அந்த வாலிபர்கள், பின்னர் தனித்தனியாகப் பிரிந்து சென்றனர். இந்த விசித்திரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
