சென்னை மணலியில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை இரசாயன நீரை அடித்து வாயு வெளியேறியதை கட்டுப்படுத்தினார்கள்.
சென்னை மணலி பேருந்து நிலையம் அருகே பூமிக்கு அடியில் செல்லும் வாயு குழாயில் திடீரென்று கசிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணலி பேருந்து நிலையம் காலை வேளையில் ஏராளமானோர் பணிக்குச் செல்லும் முக்கிய இடமாகும். தற்போது இங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அங்கு தடுப்பு வேலிகள் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தத் தடுப்பு வேலைகளுக்காகப் பள்ளம் தோண்டும்போது, பூமிக்கு அடியில் சென்ற குழாயில் விரிசல் ஏற்பட்டது. அந்தச் சேதமடைந்த குழாய், அப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற இடங்களுக்குச் சமையல் எரிவாயு கொண்டு செல்லும் முக்கியக் குழாய் எனத் தெரியவந்துள்ளது. இதிலிருந்து திடீரென வாயு கசிந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவியது.
வாயு கசிவைக் கண்டதும், அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இரசாயனம் கலந்த நீரைப் அடித்து வாயு மேலும் பரவாமல் தடுத்தனர். அவர்களின் 15 நிமிடத் தீவிர போராட்டத்தால் வாயு கசிவு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துப் போலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
