கடந்த மே 3-ஆம் தேதி நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இந்நிலையில், பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் திட்டமிட்டு ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 30 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர், உண்மையான மாணவர்களுக்குப் பதிலாக போலி ஆவணங்களுடன் தேர்வு எழுதச் சென்ற ‘புரோக்கர்கள்’ (ஆள்மாறாட்டக்காரர்கள்) ஆவர். இவர்கள் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மூன்று வெவ்வேறு பள்ளி மையங்களில் பிடிபட்டனர். மேலும், இந்த தேர்வு மோசடி நெட்வொர்க்குடன் தொடர்புடைய இடைத்தரகர்கள் உள்ளிட்ட வேறு 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புப் போலீஸ் படை (Special Task Force) அமைக்கப்பட்டுச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்போது மறுதேர்விலும் ஆள்மாறாட்டம் அரங்கேறியுள்ளது, இரவு பகலாகப் படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
