தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் காளிபெருமாள் . சமையல் வேலை செய்து வந்த இவருக்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது. இந்நிலையில், காளிபெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த காளிபெருமாள், கொம்புகாரநத்தம் குளத்தங்கரைப் பகுதிக்குச் சென்று, அங்கு உளுந்து மூட்டைக்குப் பயன்படுத்தப்படும் விஷ மாத்திரையைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் உடல் முழுவதும் பரவிய நிலையில் அவர் குளத்தங்கரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் காளிபெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
