அதிமுகவின் மிக முக்கிய முகங்களும் முன்னாள் அமைச்சர்களுமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான இணைப்பு விழா, தமிழக அரசியல் களத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் இன்று காலை 9 மணியளவில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. தவெக மூத்த அமைச்சர்களான என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் முறைப்படி இணைந்தனர். இவர்களுடன் புதுக்கோட்டை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். தவெகவில் இணைந்தவர்களுக்கு பிரியாணியுடன் தடபுடல் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முயன்றது சரியா என தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக இணைவு விழாவில் பேசிய அவர், “இபிஎஸ் எடுத்த தவறான முடிவால் அதிமுக தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஒரு தவறான முடிவை எடுத்தால் கட்சி என்னாகும் என்பதற்கு அதிமுகவே உதாரணம். நாங்கள் தலைவர் விஜய்க்காக எங்களது எம்.எல்.ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளோம்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
