கரூர் மாவட்டம் தோகைமலையில் சிப்காட் அமைக்க கூடாது என கூடலூர், புத்தூர், கல்லடை, கள்ளை ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்திற்குட்பட்ட கூடலூர், புத்தூர், கல்லடை, கள்ளை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சிப்காட் தொழிற்சாலை வர இருப்பதாகவும், அதற்காக சுமார் 1300 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை அரசு கைப்பற்ற இருப்பதாகவும் தகவல் வருகிறது. மேற்படி எங்கள் ஊரில் சுமார் 1,000-ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றோம். மேற்படி நிலத்தை எங்களிடமிருந்து கைப்பற்றினால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். மேலும் எங்களது ஊரில் ஏற்கனவே நீர்பற்றாக்குறை காரணமாக எங்கள் மக்கள் அன்றாட குடிநீர் தேவைக்கே மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எங்கள் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான நீராதாரத்தை பூர்த்தி செய்ய புத்தூர் ஏரி மட்டுமே உள்ளது. அதன் மூலம் மட்டுமே இங்கே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஏரியின் மூலம் மட்டுமே இங்குள்ள கால்நடைகளுக்கு நீர் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த பகுதியில் சிப்காட் அமைக்கப்பட்டால் எங்கள் மக்களின் நீர் தேவைக்கான நீர் ஆதாரங்களாக உள்ள புத்தூர் ஏரயின் நீரானது அனைத்தும் சிப்காட் தொழிற்சாலைக்கே பயன்படுத்தப்படும். அதனால் எங்கள் மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் நீர் தட்டுபாடு ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்குள்ளாக வேண்டிய சூழல் ஏற்படும். மேலும் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அதன் கழிவுகள் எங்களது நிலங்களில் விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. அதனால் எங்களது நிலம் மாசடைந்து மேற்படி தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகள் விவசாயம் செய்ய இயலாத தகுதியில்லாத நிலை ஏற்படும். அதனால் எங்களது மக்கள் இங்கிருந்து எங்களது சொந்த ஊரை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் விவசாயமும், கால்நடைகளுமே பெரும் பங்காற்றி வருகிறது. மேற்படி கால்நடைகளை நாங்கள் தெய்வமாக கும்பிட்டு வழிபட்டு வருகிறோம். இச்சூழலில் மேற்படி சிப்காட் தொழிற்சாலை எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டால் எங்களுடைய பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய விவசயாம் ஆகியவை பாதிக்கப்பட்டு எங்களின் எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.
ஆகையினால் எங்கள் பகுதியில் மேற்படி சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், அங்குள்ள சுமார் 1,000-ற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடுமாறும் கூடலூர், புத்தூர், கல்லடை, கள்ளை கிராம ஊர் பொதுமக்கள் சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின் சார்பிலும் மனு கொடுக்கப்ட்டது
