ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், யாதவி அறக்கட்டளை முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்த கடல் நீச்சல் நிகழ்வில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.
திறந்த கடல் நீச்சல் வரலாற்றில், ஒரே நிகழ்வில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகள் இணைந்து நீந்திய நிகழ்வு இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.
சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கிய இந்த நீச்சல், மெரினா கண்ணகி சிலை வரை நடைபெற்றது. கடலலைகளை எதிர்கொண்டு ஒவ்வொரு குழந்தையும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் இலக்கை அடைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
இந்த நிகழ்வு ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு, ஏற்றுக்கொள்ளுதல் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியதோடு, கடல்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.
இந்தச் சாதனைக்காக குழந்தைகள் பல மாதங்களாக யாதவி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரான பயிற்சியாளர் சதீஷ் சிவகுமார் தலைமையிலான சிறப்பு நீச்சல் பயிற்சியாளர்கள் குழுவின் வழிகாட்டுதலில் திறந்த கடல் நீச்சலுக்கான தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டனர். உடல் வலிமை, சகிப்புத்தன்மை, திறந்த கடலில் நீந்தும் நுட்பங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனுபவமிக்க பயிற்சியாளர்கள், உயிர்காக்கும் பணியாளர்கள், மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் படகுகள் மற்றும் தன்னார்வலர்கள் முழு நீச்சல் பாதையிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் மூலம் அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இந்த சமூக நோக்கமிக்க முயற்சி டாக்டர் காமாட்சி மெமோரியல் மருத்துவமனைகள் (Dr. Kamakshi Memorial Hospitals), ரோஸ் குழுமம் (Rose Group of Companies), Xobin, KyndleIT மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை வாரியர்ஸ் (Rotary Club of Chennai Warriors) ஆகிய சமூகக் காரணம் மற்றும் நிகழ்வு முன்னெடுப்பு கூட்டாளர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இவர்களின் பங்களிப்பு, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதோடு, குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாக அமைந்தது.
நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய யாதவி அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ் சிவகுமார் பேசியது
“இது வெறும் 2 கிலோமீட்டர் திறந்த கடல் நீச்சல் அல்ல; ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் எல்லையற்ற திறனை உலகிற்கு எடுத்துக்காட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். சரியான பயிற்சி, அன்பான வழிகாட்டுதல் மற்றும் நம்பிக்கை கிடைத்தால், இக்குழந்தைகள் எதையும் சாதிக்க முடியும் என்பதை இன்று 39 குழந்தைகளும் நிரூபித்துள்ளனர். இவர்களின் சாதனை, ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை மட்டுமல்லாமல், சமூகத்தில் உண்மையான ஏற்றுக்கொள்ளுதலையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
விளையாட்டு மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் வாய்ப்புகள் மூலம் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, சுயநிறைவு மற்றும் மன உறுதியை உருவாக்கி வரும் யாதவி அறக்கட்டளையின் பணியில் இந்த நிகழ்வு மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
மெரினா கண்ணகி சிலையை அடைந்து பெற்றோர், பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கரவொலிக்கிடையே நிறைவடைந்த இந்த வரலாற்றுச் சாதனை, “ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்பு அளித்தால், அவர்கள் அசாதாரண சாதனைகளை படைக்க முடியும் என குறிப்பிட்டார்.
