தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் மின்வாரிய பிரிவு அலுவலத்தில் இருந்து 1750 மீட்டர் அலுமினிய கேபிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் பகுதியில் மின்வாரிய பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின் பணிகளுக்காக ஏராளமான அலுமினிய மின் கேபிள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 1750 மீட்டர் நீளமுள்ள அலுமினிய கேபிளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மின் வாரிய அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து உதவிப் பொறியாளர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அலுமினிய கேபிளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
